பிரிமீயம் ரக கார் மார்க்கெட்டில் டொயோட்டா கார் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை அடுத்தபடிக்கு கொண்டு செல்லும் விதமாக, தனது வெல்ஃபயர் சொகுசு எம்பிவி காரை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
டொயோட்டா அல்ஃபார்டு காரின் மிக உயரிய சொகுசு வகை எம்பிவி மாடல்தான் வெல்ஃபயர் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த கார் பெரும் பணக்காரர்கள் எதிர்பார்க்கும் அத்துனை வசதிகளையும் நிரம்பவே பெற்றிருக்கிறது.
இந்த காரில் இருக்கும் இருக்கைகளை பார்த்தாலே பயணித்து விட வேண்டும் என்ற வேட்கையை உருவாக்குகிறது. அவ்வளவு சொகுசான இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான இந்திய கார்களில் பின் இருக்கை மிகவும் நெருக்கடியாக இருக்கும். ஆனால், மிக விசாலமான உணர்வை ஏற்படுத்தும் வகையில் அதிக இடவசதியுடன் மிக சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் உட்புறம் மிக தாராளமான இடவசதியுடன் பிரிமீயம் பிளாஸ்டிக் பாகங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் இல்லை என்பது பெரிய ஏமாற்றம். இதனை டீலர் மூலமாக பொருத்தி தருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
இன்ஃபோடெயின்மென்ட் தவிர்த்து பெரிய குறை ஏதும் இல்லை. 3 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், சிறிய டேபிள், கிங் சைஸ் இருக்கைகள், சாய்மான வசதி, பின் இருக்கை பயணிகளுக்காக 10.2 அங்குல டிவி திரைகள் உள்ளிட்டவை உள்ளன.
இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து செயல்படும் ஹைப்ரிட் மாடலில் வர இருக்கிறது. இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின்- மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 197 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.
புதிய டொயோட்டா அல்ஃபார்டு வெல்ஃபயர் கார் மிக விரைவில் இந்திய சந்தையில் களமிறக்கப்பட இருக்கிறது. ரூ.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையை ஒட்டி வரும் வாய்ப்புள்ளது. எனினும், அடுத்த ஆண்டு மார்ச் முதல்தான் டெலிவிரி கொடுக்கப்படும்..
0 comments